சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 1ம் தேதி முதல் 60 சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் அமலாகும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் முக்கிய சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களிடமிருந்து சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பல தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டுத்திட்ட முறையில் செயல்படுத்தப்படுவதால், சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்களிடமிருந்து சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்ற சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து அளவு, சாலை பராமரிப்பு செலவு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டண உயர்வு காலமும் மாறுபடுகிறது. 1992ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்தில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் ஆண்டுதோறும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சுங்கக்கட்டண உயர்வு, இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து, ஜூன் 1ம் தேதி முதல் புதிய திருத்தப்பட்ட சுங்கக்கட்டண உயர்வு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
இந்த புதிய கட்டண விகிதங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள மொரட்டாண்டி, பள்ளிக்கொண்டா, பெடகல்லுப்பள்ளி (வாணியம்பாடி), கானியூர், கிருஷ்ணகிரி, பரனூர், ஆத்தூர் (திண்டிவனம்), மாதூர், நல்லூர், சூரப்பட்டு, வானகரம், ஸ்ரீபெரும்புதூர் (பென்னலூர்), சென்னசமுத்திரம், எஸ்.வி.புரம், பட்டறைப்பெரும்புதூர், கல்லக்குடி, மணகத்தி, குருங்குடி (வீராணநல்லூர்), நாங்கிலிகொண்டான், காரியமங்கலம், நாகம்பட்டி,
கோத்தட்டை, கரகத்தஹள்ளி, கங்காரம்பாளையம், செலியமேடு, கீழ்குப்பம், பொன்னாலகரம், வள்ளம், ஏனம்காரியந்தல், தென்னமாதேவி, கதவாணி, வேலம்பட்டி, மதுக்கரை, எச். புதுப்பட்டி, பொங்கலூர், வலவந்தாங்கோட்டை, கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி, பூதகுடி (விராலிமலை), சிட்டம்பட்டி (மேலூர்), லெச்சுமணப்பட்டி, லெம்பலகுடி, கோடிக்கோட்டை, வெண்ணாத்தூர், பழைய கந்தர்வக்கோட்டை,
செண்பகம்பேட்டை, திருப்பாச்சேதி வடக்கு, போகலூர், வாகைக்குளம், திருப்பதிசாரம், உப்பார்பட்டி, சத்திரப்பட்டி, புதூர், கோவில்வேணி, வெம்புக்குடி, மணம்பாடி, புதூர்பாண்டியபுரம், எலியார்பதி, வலவந்தாங்கோட்டை ஆகிய 60 சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்த விதிமுறைகளின்படி, சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் ஒவ்வோர் ஆண்டும் பணவீக்கம் மற்றும் மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ஒன்றிய அரசின் தற்காலிக மொத்த விலை குறியீட்டெண் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் கட்டணத்தை உயர்த்துவதற்கான முதற்கட்ட ஆயத்தப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
வழக்கமான நடைமுறைப்படி, மார்ச் மாத இறுதியில் அரசு வெளியிடும் இறுதி திருத்தப்பட்ட மொத்த விலை குறியீட்டெண் கணக்கில் கொள்ளப்பட்டு, துல்லியமான கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால், இறுதி செய்யப்பட்ட புதிய சுங்கக்கட்டண விகிதங்களை அரசால் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்வுசெய்யப்பட்டத்தை தொடர்ந்து, திருத்தப்பட்ட சுங்கக்கட்டணம் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளிலும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினார்.
இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கூறுகையில், ‘‘லாரி, பேருந்து மற்றும் பல அச்சு கொண்ட பெரிய சரக்கு வாகனங்களுக்கான சுங்கக்கட்டண உயர்வு மற்றும் மாதாந்திர பாஸ் விலை அதிகரிப்பு ஆகியவை பொதுமக்களிடையே மறைமுகப் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் துவண்டு போய் உள்ள நிலையில் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சரக்குக் கட்டணங்கள் மற்றும் லாரி வாடகைகள் உயரம் வாய்ப்புள்ளதால், காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது’’ என்றனர்.
சென்னை (அக்கரை) – மாமல்லபுரம் புதிய சுங்கக்கட்டண விவரங்கள் (ஜூன் 1 முதல்)
1. கார், ஜீப், 3 சக்கர வாகனங்கள்
ஒருமுறை பயணம் ரூ.50
இருவழிப் பயணம் ரூ.75
ஒரு நாள் பாஸ் ரூ.140
50 முறை பயணம் ரூ.1,685
மாதாந்திர பாஸ் ரூ.2,960
2. இலகுரக வணிக வாகனங்கள் (சரக்கு வாகனம் / மினி பஸ்)
ஒருமுறை பயணம் ரூ.80
இருவழிப் பயணம் ரூ.125
ஒரு நாள் பாஸ் ரூ.225
50 முறை பயணம் ரூ.2,725
மாதாந்திர பாஸ் ரூ.4,780
3. பேருந்து / லாரி (2 அச்சு)
ஒருமுறை பயணம் ரூ.170
இருவழிப் பயணம் ரூ.255
ஒரு நாள் பாஸ் ரூ.470
50 முறை பயணம் ரூ.5,710
மாதாந்திர பாஸ் ரூ.10,020
4. 3 அச்சு வணிக வாகனங்கள்
ஒருமுறை பயணம் ரூ.185
இருவழிப் பயணம் ரூ.280
ஒரு நாள் பாஸ் ரூ.515
50 முறை பயணம் ரூ.6,230
மாதாந்திர பாஸ் ரூ.10,030
5. பல அச்சு வாகனங்கள்
(4 முதல் 6 அச்சு)
ஒருமுறை பயணம் ரூ.270
இருவழிப் பயணம் ரூ.405
ஒரு நாள் பாஸ் ரூ.740
50 முறை பயணம் ரூ.8,950
மாதாந்திர பாஸ் ரூ.15,710
6. மிகப் பெரிய வாகனங்கள்
கட்டுமான வாகனம்
(7 அல்லது அதற்கு மேல் அச்சு)
ஒருமுறை பயணம் ரூ.325
இருவழிப் பயணம் ரூ.490
ஒரு நாள் பாஸ் ரூ.900
50 முறை பயணம் ரூ.10,900
மாதாந்திர பாஸ் ரூ.19,125
உள்ளூர் வணிக வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம்
லோடு ஆட்டோ, டாக்சி, கார், ஜீப் ரூ.255
இலகுரக வணிக வாகனங்கள், ஜேசிபி, கிரேன் ரூ.330
லாரிகள், பேருந்துகள் ரூ.1,010
பள்ளி பேருந்துகள் ரூ.2,020
* ஒருமுறை பயணம், மாதாந்திர பாஸ் பயன்படுத்துவோருக்கு பெரும் பாதிப்பு
தினசரி பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிவாரணமாக, கார்கள், ஜீப்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனங்களுக்கான ஒருமுறை பயணம் மற்றும் இருவழிப் பயணக் கட்டணங்களில் எந்தவித சுங்கக்கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. பல அச்சு கொண்ட பெரிய வணிக வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு லாரிகளுக்கு ஒருமுறை பயணிப்போர் மற்றும் மாதாந்திர பாஸ் பயன்படுத்துவோருக்கு ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கக்கூடும்.
