பாஜ ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம்தான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

நெல்லை: ஒன்றிய பாஜ ஆட்சியின் 9 ஆண்டு காலத்தில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு எந்த கணக்கும் இல்லை என நெல்லையில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். நெல்லை மத்திய, கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் பாளை. கேடிசி நகர் மைதானத்தில் நடந்தது. கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதையும், சொல்லாததையும் செய்துள்ளார். ஆனால் ஒன்றிய அரசின் பிரதமர் மோடி கருப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார். அவர் சொன்னதை செய்தாரா? கடந்த 9 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தைத் தான் வாழ வைத்துள்ளார். அதானி குடும்பம் தான் அது. அனைத்து அரசுத் துறைகளும் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. சிஏஜி எனப்படும் ஒன்றிய கணக்கு தணிகை அலுவலகம் கடந்த 9 ஆண்டு கால ஒன்றிய பா.ஜ. ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு எந்தக் கணக்கும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

துவாரக்மாலா என்ற திட்டத்தின் கீழ் ஒரு கி.மீ., தூரம் சாலை அமைத்ததற்கு ரூ.250 கோடி கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் என்பது மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். ரமணா என்ற சினிமா படத்தில் நோயாளி இறந்த பிறகு அவருக்கு ஆபரேஷன் செய்வதற்காக மருந்து, மாத்திரைகள் கேட்பார்கள். அந்தத் திரைப்படத்தில் நாம் பார்த்தது, தற்போது நிஜக் காட்சியாகியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் கேள்வி எழுப்பினால் ஒன்றிய அரசு வாய் திறப்பதில்லை. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

The post பாஜ ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம்தான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: