*பயணிகள் வலியுறுத்தல்
மண்டபம் : ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு துணை ரயில் நிலையமாக இயங்கி வரும் மண்டபம் ரயில் நிலையத்தில், பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு 110 ஆண்டுகளுக்கு முன்பே ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் தீவுப் பகுதியையும் தமிழ் நாட்டையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரயில் பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்றது.
பாம்பன் கடலில் அதிக சூறைக்காற்று வீசும் பட்சத்தில் ரயில் போக்குவரத்து மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால் அன்றைய காலத்தில் இருந்தே மண்டபம் ரயில் நிலையம் ராமேஸ்வரத்திற்கு துணை ரயில் நிலையமாக இயங்கி வந்தது.
இந்நிலையில் தற்போது ரயில்வே நிர்வாகம் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு மண்டபம் வழியாக வேகத்துடன் ராமேஸ்வரத்திற்கு ஏறத்தாழ 14 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் எவ்வளவு அதிக நவீன தொழில் நுட்பங்களில் பாலம் அமைத்தாலும் பாம்பன் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து வீசும்போது இன்றைய காலம் வரை பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் ரயில்கள் செல்வதற்கு ரயில்வே நிறுவாகம் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இதனால் மண்டபத்தில் போதுமான தண்டவாளம் வசதிகள் இல்லாததால் 60 முதல் 160 கிலோ மீட்டர் தொலை தூரம் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை போன்ற ரயில் நிலையங்களில் இருந்து, ராமேஸ்வரம் வருகை தரும் ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிமாநில பயணிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
மேலும் வெளி மாநில பயணிகள் ஊர் தெரியாமல் தனியார் வாகனங்களுக்கு அதிகமான வாடகை கட்டணம் செலுத்தி சென்று அலைக்கழிந்து செல்கின்றனர். ஆதலால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் பட்சத்தில் 15 கிலோ மீட்டர் தொலை தூரத்திலுள்ள மண்டபம் பகுதியில் இருந்து அனைத்து ரயில்களும் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டபம் ரயில் நிலையத்திற்கு 100 ஏக்கருக்கு மேல் சொந்த நிலங்கள் உள்ளது. இதனால் ராமேஸ்வரத்திற்கு ஒரு துணை ரயில் நிலையமாக இயங்குவதற்கு அனைத்து தகுதிகளும் இந்த மண்டபம் ரயில் நிலையத்திற்கு உள்ளது.
ஆதலால் மண்டபம் ரயில் நிலையத்தை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ரயில்வே நிர்வாகம் நேரடி கவனம் செலுத்தி பாம்பன் கடலில் அதிக காற்று வீசும் காலங்களில் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தம் செய்யும் பட்சத்தில் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து தடையின்றி இயக்கும் அளவிற்கு தண்டவாளங்களை அமைக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள், முன்பதிவு மையங்கள், ஓய்வு அறைகள்,வாகனங்கள் நிறுத்தம் இடங்கள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலை தூரத்திலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு ரயிலில் வருகை தரும் பயணிகளை அலைக்கழிக்காமல் இலகுவாக ராமேசுவரத்திலிருந்து குறுகிய தொலை தூரத்திலுள்ள மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் பயணம் செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
