*கலெக்டர், எம்எல்ஏ துவக்கி வைத்தனர்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4.03 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. இதனை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க உத்தரவிட்டார். அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.3000 ஆகியவை அடங்கிய தொகுப்பு நேற்று முதல் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4,02,556 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 450 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தமாக 4,03,006 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ராமநாதபுரம் வசந்தம் நகரில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஜீணு, ராமநாதபுரம் நகர மன்ற தலைவர் கார்மேகம், துணைப்பதிவாளர் ராஜகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் காசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி தாலுகாவில் உள்ள 174 ரேஷன் கடைகளில் 72 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய 3000 ரூபாய் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. போகலூர் மேற்கு ஒன்றியம் கும்முக்கோட்டை ஊராட்சி பூவிளத்தூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரூ.3 ஆயிரத்தை எம்எல்ஏ முருகேசன் வழங்கினார்.
கும்முக்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன், அறியக்குடி பாலச்சந்தர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பரமக்குடி பாரதி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சம்பத்குமார், பரமக்குடி வடக்கு இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பரிசு தொகுபுகளை வாங்கி சென்றனர்.
மேலும் மண்டபம் பேரூராட்சி பகுதியில் பேரூர் திமுக செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள், தொண்டர்கள் நிர்வாகிகளும், சாத்தக்கோன்வலசை பிரப்பன் வலசை, அழகன்குளம், பனைக்குளம், தேர்போகி, புதுவலசை உள்பட ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் மண்டபம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முத்துக்குமார் தலைமையிலும் ஒன்றிய அவைத் தலைவர் நாகராஜன் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் கரும்பு மற்றும் வேஷ்டி சேலைகள் உள்பட சக்கரை நேற்று வழங்கப்பட்டது.
கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பூரணி பகுதியில் உள்ள ரேஷன் கடையில், நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு பொருள்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பாத்திமாகனி, திமுக நகரச் செயலாளர் ஜாகிர்உசேன், பேரூராட்சி துணைத் தலைவர் மாரி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருள்கள் முழுகரும்பு ஒன்று, பச்சரிசி, சர்க்கரை, மற்றும் ரூ.3000 வழங்கி துவக்கி வைத்தனர்.
