*7 பேர் கைது, வாகனங்கள் பறிமுதல்
ஏழாயிரம்பண்ணை : அதிகாரிகள் சீல் வைத்த குடோனில் பட்டாசுகளை திருடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். குடோன் உரிமையாளரை இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு குடோனில் இருந்து வெடிபொருட்கள் காணாமல் போனதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்திருந்தார்.
இந்த பட்டாசு குடோன் தாயில்பட்டி மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேஷ் பாண்டியன் என்பவருக்கு சொந்தமானது. இந்த குடோனில் கணேஷ் பாண்டியன் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை ஆய்வு செய்யுமாறு நீதிமன்ற அறிவுறுத்தியது. இதன்படி கடந்த 4ம் தேதி பட்டாசுகளை பார்வையிட கிராம நிர்வாக அலுவலர் வந்தார். அப்போது பூட்டி இருந்த குடோனில் பட்டாசுகள் காணாமல் போய் உள்ளதையும் குடோன் காலியாக இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் மற்றும் காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் பட்டாசு குடோனின் உரிமையாளர் கணேஷ் பாண்டியன் மற்றும் பலர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதை அடுத்து ராம் பாண்டி, செல்வ பாண்டி, ராமர், திருமுருகன், ராம்குமார், முத்துராஜ் உள்பட 7 பேரை வெம்பக்கோட்டை காவல் துறையினர் பிடித்து கைது செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர் கணேஷ் பாண்டியன் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட பட்டாசுகள் மற்றும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட 3 மகேந்திரா லோடு வேன்கள் ஆகியவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், வெடி பொருட்கள் தொடர்பான சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறை கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
