சென்னிமலை : சென்னிமலை அருகே பெற்றோர்களுடன் ஒரே குழுவாக புகைப்படத்துடன் கூடிய காலண்டர் அச்சடித்து அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குப்பிச்சிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2026ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த மாணவ, மாணவிகள் புதிய முயற்சியாக தங்களின் பெற்றோர்கள் அனைவரையும் பள்ளிக்கு வரவழைத்து குழுவாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
பின்னர், அந்த புகைப்படத்தை 2026ம் ஆண்டின் தினசரி காலண்டரில் பிரிண்ட் செய்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பெற்றோருக்கும் அந்த காலண்டரை வழங்கும் போது அவர்களின் குழந்தைகள் படத்தையும் தனித்தனியாக ஒட்டி வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்,“ மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்களின் முயற்சி எங்களுக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது” என்றனர்.
