உங்கள் கனவுகளை திட்டங்களாக உருவாக்குவேன்; இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பொன்னேரி : உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “மக்களிடம் கனவுகளை கேட்டு நிறைவேற்ற தொடங்கும் வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்றைய நாள். அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் தருவதே எங்களது வாக்குறுதி. தமிழ்நாடு செய்கிற அளவுக்கு இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யவில்லை. போட்டித் தேர்வுகள் அனைவற்றிலும் அடித்து தூள் கிளப்புகிறார்கள் தமிழ்நாடு மாணவர்கள். மருத்துவ சுற்றுலாவின் மையமாக திகழ்கிறது தமிழ்நாடு. தமிழ்நாட்டில்தான் 2ம் நிலை, 3ம் நிலை நகரங்களும் வளர்ந்துள்ளன. சமூக நீதி அரசை நாம் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் உரிமைகள் எல்லாவற்றையும் ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் எடப்பாடி. ஆட்சியில் இருந்தபோது ஆமாம் சாமி போட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தது அதிமுக.

சட்டமன்றம் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதை முதல் வேலையாக கருதுகிறார் ஆளுநர். ஒன்றிய அரசு நிதி தர மறுத்தும் புறக்கணித்தும் அவர்கள் வெளியிடும் புள்ளி விவரத்திலும் முதலிடத்தில் உள்ளது நமது அரசு. தமிழ்நாட்டின் கஜானாவை சுரண்டிய அதிமுக ஆட்சியை மக்கள் விரட்டியடித்தனர். தேர்தலுக்கு கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். 7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக வளர்ந்துள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் செய்யப்பட்டது.

1.3 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை தரப்படுகிறது. எங்கே இலவச பயணம் தரப்போகிறார்கள் என்று கூறினார்கள், ஆனால் ஆட்சிக்கு வந்த மறுநாளே முதல் கையெழுத்து போட்டேன். மக்களுக்கு தேவை என்று சொன்னால் உடனே செய்கிறோம். காலை உணவுத் திட்டத்தில் 21 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளோம்.

முறியடிக்க முடியாத சாதனைகளை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. பொங்கலை மகிழ்ச்சி பொங்கலாக மாற்ற மக்களுக்கு ரூ.3,000 பரிசு கொடுத்துள்ளோம். மக்களின் கனவுகள் நனவாகும் என்பதே தேர்தலுக்கான வாக்குறுதி. உங்கள் கனவுகளை திட்டங்களாக உருவாக்குவேன்; இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி. சுயமரியாதைமிக்க சமூக நீதி சமூகமாக உருவாக உறுதியேற்க வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: