பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரத்துடன் பரிசுத்தொகுப்பு

*அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

திருப்பூர் : திருப்பூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 201 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், கூட்டுறவுத்துறை மூலம் 848 முழுநேர நியாயவிலை கடைகளிளும், 348 பகுதி நேர நியாயவிலை கடைகளிலும் மொத்தம் 1196 நியாய விலைக்கடைகளிலும் 7,69,580 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிகுழுக்கள் நடத்தும் 13 நியாய விலைக்கடைகள் மூலம் 20,860 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 22 நியாய விலைக்கடைகள் மூலம் 11,439 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 322 குடும்ப அட்டைதாரர்கள் அடங்கும்.

திருப்பூர் மாவட்டத்திற்கு 8,02,201 குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 802 மெட்ரிக்டன் பச்சரிசியும், 802 மெட்ரிக் டன் சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் செய்திட ரூ.3.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8,02,201 கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கம் ரூ.3000 வழங்கிட ரூ.240.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், தாயுமானவர் திட்டம் மூலம் 65 வயதிற்கு மேற்பட்டுள்ள 71,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு டிசம்பர் 2025 மாதம் இல்லம் தேடி பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் பிரபா, தேவி உள்ளிட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த ஜெயந்தி: எந்த பொங்கல் பண்டிகைக்கும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாட உள்ளோம். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். எதிர்பார்க்காத அளவுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பரிசுத்தொகுப்பு வழங்கியுள்ளார். முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.

கணபதிபாளையத்தை சேர்ந்த சங்கீதா: பண்டிகை காலம் என்றாலே செலவுகள் அதிகமாக இருக்கும். இதனால் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்படும். ஆனால் ஏழை மக்களின் துயர் துடைக்கவும், அவர்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு ரூ.3 ஆயிரம் தொகுப்புடன் வழங்கியதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளேன். என்றார்.

சுண்டமேட்டை சேர்ந்த வசந்தி: தமிழக முதல்வர் ஏழை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுபோல் மாணவ- மாணவிகளின் கல்வி உள்ளிட்டவைகளுக்காகவும் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். தற்போது பொங்கல் பண்டிகைக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் ஏழைகள் வீட்டிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியும். என்றார்.

திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை செல்வராஜ் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், கவுன்சிலர்கள் பி.ஆர்.செந்தில்குமார் மற்றும் செந்தூர் முத்து மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் குடும்ப அட்டைதாரர்கள் பலரும் உற்சாகமாக பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று சென்றனர்.

திருப்பூர் வடக்கு மாநகரம் பாண்டியன் நகர் பகுதி 7வது வட்டம் கே.செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட, அவிநாசிநகர் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் ஈ.தங்கராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் பாண்டியன் நகர் பகுதி அவைத்தலைவர் தயானந்தன், வட்ட செயலாளர் செல்வராஜ், பிரதிநிதிகள் நவநீதகிருஷ்ணன், மணி, பால்ராஜ், கோபாலகிருஷ்ணன், யுவராஜ், பாலசுப்பிரமணியம், பாக முகவர்கள் கார்த்தி, பன்னீர், லட்சுமணன், மாறன், வீரேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனா்.

Related Stories: