கலவரத்தில் இருந்து தப்பி சென்னை வந்த மணிப்பூர் குடும்பத்தினருக்கு ஆட்சியர் அருணா உதவி..!!

சென்னை: கலவரத்தில் இருந்து தப்பி சென்னை வந்த மணிப்பூர் குடும்பத்தினருக்கு ஆட்சியர் உதவி செய்தார். முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்த சில மணி நேரத்திலேயே மணிப்பூர் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த ஜோசப் (61) தனது குடும்பத்தினர் 8 பேருடன் தலைமைச் செயலகம் எதிரே அமர்ந்திருந்தார். செங்குன்றம் முண்டியம்மன் நகரைச் சேர்ந்த மூர்த்தி (61) மணிப்பூர் குடும்பத்தினரை அழைத்து வந்திருந்தார். மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு தப்பி வந்த தங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது.

மணிப்பூர் ஜோசப் மனு அளித்த சில நிமிடங்களிலேயே முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து ஆட்சியர் அருணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்சியரை நேரில் சென்று பார்க்குமாறும், அவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று தனிப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆட்சியர் அருணா மணிப்பூர் குடும்பத்தினருக்கு மதிய உணவு அளித்து ஆறுதல் கூறி தப்பி வந்த விவரம் கேட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் மணிப்பூரில் இருந்து உயிர் தப்பி சென்னை சென்ட்ரல் வந்து 2 நாட்கள் தங்கி இருந்துள்ளனர்.

எங்கு செல்வது என தெரியாமல் மணிப்பூர் குடும்பத்தினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே அழுது கொண்டிருந்தனர். அப்போது சொந்த அலுவல் காரணமாக அங்கு வந்த பர்மா அகதி மூர்த்தி (66) அவர்களிடம் விசாரித்துள்ளார். மணிப்பூர் குடும்பத்தினர் மீது இரக்கப்பட்ட மூர்த்தி, அவர்களை செங்குன்றத்தில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மணிப்பூர் குடும்பத்தினர் 8 பேருக்கும் உணவு, உடை கொடுத்து தங்குவதற்கு ரூ.3000 வாடகையில் வீடு பிடித்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

The post கலவரத்தில் இருந்து தப்பி சென்னை வந்த மணிப்பூர் குடும்பத்தினருக்கு ஆட்சியர் அருணா உதவி..!! appeared first on Dinakaran.

Related Stories: