போலீசில் சிக்கவைப்பேன் என பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை: ஆன்லைனில் பழகிய ஆசாமிக்கு வலை

பெரம்பூர்: தடை செய்யப்பட்ட பொருளை அனுப்பி போலீசில் சிக்கவைப்பேன் என ஆன்லைனில் பழகிய ஆசாமி பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஓட்டேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பராக்கா ரோடு, முதல் தெருவைச் சேர்ந்த சுதாகர் மகள் அஸ்வினி (20). பகுதி நேரமாக பியூட்டிஷியன் வேலை செய்து வருகிறார். இவர், இணையதளம் மூலமாக அடையாளம் தெரியாத ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். பணம் செலுத்தினால் உங்களுக்கு ஒரு கிப்ட் பார்சல் அனுப்புகிறேன் என அஸ்வினியிடம் அந்த நபர் கூறியுள்ளார். அது விலை உயர்ந்ததாக இருக்கும் எனக் கூறி அஸ்வினியிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.

அஸ்வினியும் 2 தவணையில் ரூ.25 ஆயிரம் கட்டியுள்ளார். இந்நிலையில் அஸ்வினியை நேற்று மாலை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர், கூடுதலாக பணம் வேண்டும் எனக் கூறியுள்ளார். இல்லை என்றால் உங்களது வீட்டிற்கு ஒரு கூரியர் வரும், அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கும். போலீஸ் உங்களை வந்து கைது செய்வார்கள் எனக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நேற்று மாலை 5.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அஸ்வினியின் தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவரிடம் காண்பித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரும் எந்த அழைப்புகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், ஆன்லைன் மூலம் வரும் மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படியிருந்தும் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பொதுமக்கள் ஏமாறுவதும், அதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

The post போலீசில் சிக்கவைப்பேன் என பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை: ஆன்லைனில் பழகிய ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: