திருவொற்றியூரில் தாய், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிநாட்டில் இருந்து கணவர் திரும்புவதில் தாமதம்

* பாஸ்போர்ட்டை புதுப்பிக்காததால் சிக்கல், கைதான கல்லூரி மாணவன் கதறி அழுதார்

சென்னை: திருவொற்றியூரில் தாய், தம்பியை கத்தியால் குத்தி உடல்களை சாக்குமூட்டையில் கட்டிய சம்பவத்தில், கொலையுண்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவுகிறது. சென்னை திருவொற்றியூர் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (45). இவரது கணவர் முருகன் ஓமன் நாட்டில் பொக்லைன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவர்களது மூத்த மகன் நித்திஷ் (20), தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். 2வது மகன் சஞ்சய் (15) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நித்திஷுக்கு சரியாகப் படிப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறாமல் அரியர்ஸ் வைத்து வந்துள்ளார். இந்நிலையில் நித்தீஷ் படிக்காததை சுட்டிக்காட்டி அவரது தாயார் பத்மா அடிக்கடி கண்டித்துள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துவந்த நித்திஷ், தனது தாயையும் தம்பியையும் வீட்டிலேயே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் தற்கொலைக்கு முயன்றும் பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளாமல், பேருந்து நிலையம், கடற்கரை என ஆங்காங்கே சுற்றித் திரிந்துள்ளார். பிறகு பலகைதொட்டிக்குப்பம் அருகே பேருந்து நிறுத்தத்திற்கு போய் அங்கு தூங்கியுள்ளார். அங்கு சென்ற போலீசார் நித்திஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட தாயார் பத்மா, இரண்டாவது மகன் சஞ்சய் ஆகியோரது உடலை போலீசார் கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த கொலைச் சம்பவம் குறித்து ஓமன் நாட்டில் உள்ள பத்மாவின் கணவர் முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்து துடிதுடித்த முருகன், இந்தியா வருவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.

ஆனால் அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியா திரும்புவதற்கு விமான டிக்கெட் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பாஸ்போர்ட் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பாஸ்போர்ட் சரி செய்யப்பட்டு இன்று காலை அல்லது மாலைக்குள் சென்னைக்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

முருகன் சென்னைக்கு வந்த பிறகுதான் இருவரது உடல்களும் முருகனிடம் ஒப்படைக்கப்படும் என்பதால் பத்மா மற்றும் சஞ்சய் ஆகியோரின் உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனையிலேயே பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மன அழுத்தத்தால் தாயையும், தம்பியும் கொலை செய்து விட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நித்திஷ், மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பார். அதனால் தற்கொலை போன்ற விபரீதமான முடிவை எடுக்காமல் இருக்க அவருக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

* ‘எனக்கு வாழவே பிடிக்கல…’
தாய், தம்பியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள துணிவில்லாத நித்திஷ் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சிறைக்கு போவதற்கு முன்னர், உறவினர்கள் நித்திஷை காவல் நிலையத்தில் சந்தித்து ஏன் இதுபோன்ற தவறை செய்தாய் எனக் கேட்டுள்ளனர். அதற்கு, தந்தை பல ஆண்டு காலமாக ஓமன் நாட்டில் இருக்கிறார். நான் நன்றாக படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்பதற்காக தந்தை வெளிநாட்டிலும், தாய் அக்குபஞ்சர் மையத்திலும் பணியாற்றி மிகவும் சிரமப்பட்டு என்னைப் படிக்க வைத்தனர்.

நான் நன்றாக படிக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அதேநேரத்தில் படி..படி.. என்று அம்மா தொடர்ந்து கொடுத்துவந்த நச்சரிப்பையும் என்னால் தாங்க முடியவில்லை. கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் தற்கொலை செய்து கொண்டால் தாயும், தம்பியும் என் பிரிவால் மிகவும் வேதனை அடைவார்கள்.

அதனால் இருவரையும் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் தற்கொலை செய்து கொள்ள துணிச்சல் வரவில்லை. அவசரப்பட்டு இருவரையும் கொலை செய்து விட்டேன். இருவரையும் பிரிந்து பிறகு நான் மட்டும் ஏன் இங்கு உயிர் வாழ வேண்டும். எனக்கு உயிர் வாழப் பிடிக்கவில்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். அப்பா என்னை மன்னிக்க வேண்டும் என்று உறவினர்களிடம் கூறி நித்திஷ் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

The post திருவொற்றியூரில் தாய், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிநாட்டில் இருந்து கணவர் திரும்புவதில் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: