எருமை மாடு முட்டி பெண் படுகாயம்; தந்தை, மகன் அதிரடி கைது

திருவொற்றியூர்: எருமை மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், மாட்டின் உரிமையாளர்களான தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் சுற்றித்திரிந்த எருமை மாடு விரட்டி, விரட்டி பொதுமக்களை முட்டி தள்ளியது. இதில், அம்சா தோட்டம் தெருவை சேர்ந்த மதுமதி (33) என்பவர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சென்று பொதுமக்களை முட்டி தள்ளிய எருமைமாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்றி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் ஒப்படைத்தனர்.

இதுசம்பந்தமாக மதுமதி கொடுத்த புகாரின்படி, திருவொற்றியூர் போலீசார் 2 பிரிவு வழக்கு பதிவு செய்து மாட்டின் உரிமையாளர் குறித்து விசாரித்தனர். இதில், கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ், (51), இவரது மகன் வெங்கலசாய் (30) ஆகியோர் ஆந்திராவில் இருந்து மாடுகளை வாங்கிவந்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று ஆந்திராவில் இருந்து வாங்கிவந்த மாடுகளை லாரியில் இருந்து இறக்கும்போது தப்பியோடி கிராமத் தெருவுக்கு வந்ததாகவும் வாகனங்களின் ஹாரன் சத்தம் காரணமாக மிரண்டு ஓடி மக்களை முட்டியுள்ளது.இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து கோடீஸ்வரராவ், இவரது மகன் வெங்கலசாய் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுமதியை மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்துவ செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

The post எருமை மாடு முட்டி பெண் படுகாயம்; தந்தை, மகன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: