7 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; புதுச்சேரி அமைச்சர் மகள் இடத்தில் ஆலை நடத்திய 2 பேருக்கு சம்மன்: 21 நாட்களுக்குள் ஆஜராக சேலம் வனத்துறை உத்தரவு

சேலம்: ஏழு டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி அமைச்சர் மகள் இடத்தில் சந்தன எண்ணெய் உற்பத்தி ஆலை நடத்திய மகாராஷ்டிராவை சேர்ந்த உரிமையாளர்கள் 2 பேருக்கு சேலம் வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், 21 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து சேலம் வழியே சரக்கு வாகனத்தில் புதுச்சேரிக்கு கடத்திச் செல்லப்பட்ட 1.5 டன் சந்தன கட்டைகளை கடந்த 3ம் தேதி சேலம் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முகமது சுகைல் (34), முகமது பசிலு ரகுமான் (26), முகமது மிசைல் (27), முகமது அப்ரார் (26), பஜாஸ் (35), உம்மர் (43) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், உம்மர் ஆகிய 4 பேரை காவலில் எடுத்து விசாரித்ததில், கேரளாவில் இருந்து சேலம் வழியே புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் செயல்படும் தனியார் சந்தன எண்ணெய் ஆலைக்கு சந்தன கட்டைகளை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் தலைமையிலான தனிப்படையினர், புதுச்சேரியில் சம்பந்தப்பட்ட ஆலைக்கு சென்றனர். அப்போது அந்த ஆலை, புதுச்சேரி அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவதும், அவரிடம் குத்தகைக்கு எடுத்த மகாராஷ்டிராவை சேர்ந்து இருவர் ஆலையை நடத்தி வருவதும் தெரியவந்தது.

அந்த ஆலையில் சோதனையிட்டு, எவ்வித ஆவணங்களும் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் சந்தன கட்டைகள், சந்தன தூள் மூட்டைகள், சுமார் 20 லிட்டர் எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சேலம் எடுத்து வந்து வனத்துறையின் குடோனில் பாதுகாப்பாக வைத்தனர்.
இவ்வழக்கில் ஆலை உரிமையாளர்களான மகாராஷ்டிராவை சேர்ந்த டகாடு புலாரி, பகவத் கிரி ஆகியோரிடம் விசாரிக்க சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி அந்த ஆலையின் பவர் ஏஜென்ட் எனப்படும், கர்நாடகாவை சேர்ந்த நயன் (26) என்பவர் சேலம் மாவட்ட வன அலுவலகம் வந்து, சேலம் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவியிடம் சந்தன கட்டைக்கான கொள்முதல் ஆவணங்கள் எனக்கூறி ஒரு பைலை வழங்கினார். இதனிடையே புதுச்சேரி அமைச்சரின் மகள் இடத்தில் ஆலை நடத்தி வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த டகாடு புலாரி, பகவத் கிரி ஆகிய இருவருக்கும் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி, சம்மன் அனுப்பியுள்ளார். அதில், 21 நாட்களுக்குள் இருவரும் சேலம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பவர் ஏஜென்ட் நயன் வழங்கிய ஆவணங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து வருகிறோம். ஆலை உரிமையாளர்கள் இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரித்தால்தான், அந்த சந்தன கட்டைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. கடத்தப்பட்டிருந்தால் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது தெரியவரும். அதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

The post 7 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; புதுச்சேரி அமைச்சர் மகள் இடத்தில் ஆலை நடத்திய 2 பேருக்கு சம்மன்: 21 நாட்களுக்குள் ஆஜராக சேலம் வனத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: