காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்: மெகபூபா முப்தி உருக்கம்


புதுடெல்லி: காஷ்மீர் மக்களின் வலி மற்றும் வேதனைகளை ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உருக்கமாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தனது மகள் இலிதிஜா முப்தியுடன் இணைந்து எழுதிய,’ இந்திய ஒற்றுமை யாத்திரை: இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுப்பது’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை அவர் வெகுவாக புகழ்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நீளம், அகலம் முழுவதும் சிறியதாக மாறிவிட்டதாக மக்கள் உணர்கிறார்கள். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், காங்கிரஸ் கட்சி குறிப்பாக ராகுல் காந்தியால் மட்டுமே ஜம்மு காஷ்மீர் மக்களின் வலி மற்றும் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவின் போது ராகுல்காந்தியுடன் நீண்ட நேரம் உரையாடினேன். அவரை பப்பு என்று இகழ்ந்தார்கள். ஆனால் அவரிடம் பேசிய போதுதான் அவரது அறிவின் வீச்சைக் கண்டு வியந்தேன்.

தேசிய மற்றும் சர்வதேச விஷயங்கள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருப்பதைக் கண்டேன். இதை எல்லாம் அறிய எவ்வளவு பணம் மற்றும் ஆற்றல் வேண்டும் என்று நான் யோசித்தேன். ஆனால் அவரை ஒரு அறியாமை அரசியல்வாதியாக தவறாக பா.ஜ முன்நிறுத்தி வருகிறது. நாங்கள் எங்கள் உரையாடலில் மிகவும் ஆழமாக மூழ்கிவிட்டோம். அதனால் 15 கிலோமீட்டர்கள் மூன்று மணிநேர நடைப்பயணம் ஒரு நொடியில் பறந்தது.

2016ம் ஆண்டு எனது தந்தையும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சயீத் காலமானதிலிருந்து வீட்டை விட்டு வெளியேற மறுத்த எனது தாயார் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராகுல்காந்தியுடன் இணைந்து யாத்திரையில் பங்கேற்றார். ஒரு இளைஞன் பழிவாங்கப்பட்டும், திட்டப்பட்டும், இவ்வளவு ஆழமான பாசத்தைப் அவர் மீது மக்கள் பொழிந்திருப்பது எனது அம்மாவின் மனதில் எங்கோ ஒரு இடத்தை தாக்கியிருக்க வேண்டும்.

என் மகள் இல்திஜாவும், அம்மா, நானும் அவருடன் நடக்க விரும்புகிறேன் என்றார். நான் திகைத்துப் போனேன். நான் வார்த்தைகளுக்குத் திணறுவது அரிதான சந்தர்ப்பங்கள். எனக்கு அப்போது அனுமதி அளிப்பதை தவிர வேறு வழியில்லை. மூன்று தலைமுறைகளையும் கடந்தும் காந்தி குடும்பத்தால் மட்டுமே மக்களை சிரமமின்றி வசீகரிக்க முடிந்தது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்: மெகபூபா முப்தி உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: