அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலனை: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசு நாளை நடத்த உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதால் தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்க இருப்பது தொடர்பாக விவாதிக்க மார்ச் 5ம் தேதி தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூட்டத்தில் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அக் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கட்சி தொடங்கிய நாளில் இருந்து பெரும்பாலும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ள நிலையில் எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது.

தமிழகத்தில் 183 அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் அரசு தங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அழைக்க முடியாது. எனவே, எங்கள் கட்சியையும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும்.

கூட்டத்தில் பங்கேற்க மனுதாரர் கட்சி சார்பில் பொதுத்துறை செயலாளருக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்றார். இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கட்சியின் பதிவு தொடர்பான ஆதாரத்துடன் மனுதாரர் இன்றே விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலனை: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: