உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் விழிப்புணர்வு பெருமித நடை பேரணி பெண்கள் திரளாக பங்கேற்பு

தூத்துக்குடி, மார்ச் 5: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்தும்,  உலக மகளிர் தினத்தை முன்னிட்டும் தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு பெருமித நடைபேரணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி  கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் பெண்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.

 தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை  எதிர்த்தும், மகளிர் தின விழிப்புணர்வு பெருமித நடை பேரணி நடத்தப்பட்டது. இதற்குத் தலைமை வகித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, மகளிர் தின விழிப்புணர்வு பெருமித  நடை பேரணியை கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.

ராஜாஜி  பூங்காவில் துவங்கிய இப்பேரணி குரூஸ் பர்னாந்து சிலை பகுதியில் நிறைவடைந்தது.  பேரணியில், காமராஜ் கல்லூரி, பிஷப் கால்டுவெல் கல்லூரி  மாணவிகள், கிராம உதயம் இயக்கம் சார்பில்  மகளிர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்  மற்றும் உதவியாளர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் போற்றுவோம்,  போற்றுவோம் பெண்மையை போற்றுவோம், வலிமையான பெண்களே, வலிமையான தேசம்,  ஒழிப்போம், ஒழிப்போம் பாலியல் வன்முறையை ஒழிப்போம், வரதட்சனை கொடுப்பதும்  குற்றம், வாங்குவதும் குற்றம் என்ற விழிப்புணர்வு வாசனங்கள் அடங்கிய பாதாதைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

இதில் மாவட்ட சமூக நல  அலுவலர் (பொ) தனலட்சுமி, ஆழ்வார்திருநகரி கிராம உதயம் மேலாளர்   வேல்முருகன், காமராஜ் கல்லூரி உதவி பேராசிரியர் ரமேஷ் கண்ணா, பிஷப்  கால்டுவெல் கல்லூரி உதவிப் பேராசிரியர் சையது அலி பாத்திமா, பாதுகாப்பு  அலுவலர் செல்வ மெர்சி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், அங்கன்வாடி  பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: