கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, பிப். 20: கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்  உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர ஊழியராக்கி குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் ஊதியம்  வழங்க வேண்டும். உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்,  அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.5  ஆயிரமும் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சமும்,  உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். எல்.கே.ஜி. வகுப்புகளில்  அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும். அங்கன்வாடி  திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சீருடை சலவைப்படி வழங்க வேண்டும். ஆண்டுதோறும் சீருடையுடன் தையல் கூலியும் வழங்க வேண்டும்.  அரசின் காலிப்பணியிடங்களில் இளநிலை உதவியாளராக அங்கன்வாடி ஊழியர்களை  பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்  உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 அங்கன்வாடி ஊழியர் சங்க  வட்டாரத் தலைவர் சந்திரலேகா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்  ஜெயலட்சுமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர்  சின்னத்தம்பி,  வட்டார துணைத்தலைவர் நவநீதகண்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்  பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், தமிழ்நாடு உதவி வேளாண்  அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் பிரான்சிஸ்  பேசினர். இதில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திரளாகப் பங்கேற்றனர்.

Related Stories: