தர்மபுரி, பிப்.6: தர்மபுரி அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால், பணி நிறுத்தப்பட்டது. தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி, வெண்ணாம்பட்டி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு அருகே காமராஜர் தெரு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று தனியார் செல்போன் டவர் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இத்தகவல் கிடைத்து சமூக ஆர்வலர் மார்க்ஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் கிடைத்து இலக்கியம்பட்டி ஊராட்சி செயலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
