179 அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்

தர்மபுரி, மார்ச் 25: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 179 அரசு  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுதேர்வு எழுத வராத மாணவ, மாணவிகளை துணை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 12, 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் தேர்வுக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பொதுத்தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 179 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து, துணை தேர்வுகள் எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தர்மபுரியில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் பெற்றோரை அணுகி எதிர்வரும் துணைத் தேர்வில் அவர்களை கலந்து கொள்ளச் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.

மேலும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள 10ம் வகுப்பு மாணவிகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் நடைபெறும் சிறப்பு பயிற்சி மையத்துக்கு வரவழைத்து பயிற்சியில் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அவ்வையார் அரசு மகளிர்  மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் தெரசாள், உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலதா, ஆசிரியர் பயிற்றுநர் அருண்குமார், பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: