இ சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, மார்ச் 24: தர்மபுரி மாவட்டத்தில் இசேவை மையம் அமைக்க ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், இசேவை மையம் இல்லாத பகுதிகளில் மையங்களை தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவது இதன் நோக்கமாகும். தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் இசேவை மையம் திட்டத்தின் கீழ், இசேவை மையங்கள் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தை பற்றி கூடுதல் தகவல்கள் பெறவும், இணைய வழியில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி கடைசி நாளாகும். அன்றிரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். எனவே, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: