115 கிராமங்களில் 3,715 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை

தர்மபுரி, மார்ச் 25: தர்மபுரி மாவட்டத்தில் நடமாடும் வாகனம் மூலம், 115 கிராமங்களில் 3715 பேருக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு (2022) 26,813 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1581 புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 1176 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 405 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். இவற்றில் மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் 32 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எச்ஐவி தொற்று உள்ளவர்களில் 111 பேருக்கு காசநோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்களில் 321 பேருக்கும், கர்ப்பிணி தாய்மார்களில் 6 பேருக்கும் காசநோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 31 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஆண்கள் 1105 பேருக்கும், பெண்கள் 476 பேர் என மொத்தம் 1581 பேர் அடங்குவார்கள். நோய் கண்டறியப்பட்டவர்களில் சுமார் 1175 பேர் தற்போது சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்நிலையில் நேற்று, உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் சாந்தி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர், விழிப்புணர்வு பேரணியை அவர் தொடங்கி வைத்தார். இந்த பேரணி பாரதிபுரம் வரை நடந்தது. இந்நிகழ்ச்சியில் டீன் அமுதவல்லி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் செளண்டம்மாள், துணை இயக்குநர் (தொழுநோய்) புவனேஷ்வரி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜ்குமார், மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா, தேசிய நல வாழ்வு ஒருங்கிணைப்பாளர் பாலாஜி உட்பட மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சாந்தி கூறியதாவது: உரிய சிகிச்சையின் மூலம் காசநோயை முற்றிலும் குணப்படுத்தலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட காசநோய் மையத்தில் இதற்கான சிகிச்சை இலவசமாக கிடைக்கும். காசநோய் இல்லாத தர்மபுரி மாவட்டம் உருவாக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட காசநோய் துறைக்கு, கடந்த ஆண்டு ₹46 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட நடமாடும் வாகனம் அரசால் வழங்கப்பட்டது. இந்த வாகனம் தினசரி கிராமங்களுக்கு சென்று, காசநோய் உள்ளதா என சளி எடுத்து கண்டறிந்து வருகிறது. கடந்த 11.07.2022 முதல் 31.12.2022 வரை  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 115 கிராமங்களுக்கு,  நேரடியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து 3715 நபர்களுக்கு  எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் 9 புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர். மின்வசதி இல்லாத இடங்களில் கூட, ஜெனரேட்டர் உதவியுடன் இந்த வாகனம் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: