இரண்டாம் போக நெல் சாகுபடி பணி மும்முரம்

தர்மபுரி, மார்ச் 27: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 853.01 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஆண்டு 1200 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நல்லமழை பெய்ததால் நெல், கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்தது. சின்னாறு அணை, வாணியாறு அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, தும்பலஅள்ளி அணை, கேசர்குலி அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி  ஆகிய அணைகளும் கடந்த ஆண்டு பெய்த மழையால் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதுதவிர 100க்கும் மேற்பட்ட ஏரிகளும் நிரம்பின.

கடந்த 10 ஆண்டில் நெல் சாகுபடி செய்யப்படாத இடங்களில், நெல் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டது. குறிப்பாக, தும்பல அள்ளி அணை  நீர்பிடிப்பு பகுதிகளில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நெல் சாகுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. முதல்போகம் அறுவடை செய்யப்பட்டு, தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கோடை வெயிலையும் தாங்கி நெல் பயிர்கள் பச்சை பசேல் என்று உள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால், ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் அனைத்து அணைகளும் நிரம்பின. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம்  உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மானாவாரி பயிர்கள், சிறுதானியங்கள், கரும்பு, நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர். குறிப்பாக நெல் அதிகளவில் சாகுபடி செய்தனர். தற்போது 2ம் போக நெல் சாகுபடியில் மு்ம்முரமாக ஈடுபட்டுள்ளனர்,’ என்றனர்.

Related Stories: