மின் இணைப்பு பணியால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஸ்பிக்நகர், ஜன.22: தனியார் மின்நிலையத்தின் மின்கோபுரத்திற்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்ததால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ள பகுதிகளில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையும் முக்கியமானதாகும். இந்த சாலையில வாகனங்கள் செலவதில் ஏதேனும் தடைஏற்பட்டால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும். நேற்று தூத்துக்குடி ஹார்பர் சாலையில் உள்ள தனியார் மின் நிலையத்தின் மின் கோபுரத்திற்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடந்தது. இந்த பணிகள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள உப்பாத்து ஓடை மீது நடைபெற்றதால் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதும் சிறிது பணிகள் முடிந்த பின்பு மீண்டும் செல்ல அனுமதிக்கப்படுவதுமாக இருந்தது. இதனால் காலை முதல் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் பலர் அவதியடைந்தனர். மாலை பணிகள் நிறைவடைந்தபின்னரே போக்குவரத்து நெரிசல் சீரானது.

Related Stories: