திருச்செந்தூரில் தொடர்மழையால் உருக்குலைந்த சாலைகள்

திருச்செந்தூர், டிச. 10: திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் உருக்குலைந்த சாலைகளை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் சொந்த செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்தது. இதனால் நிரம்பிய குளங்கள் அனைத்தும் மறுகால் பாய்கின்றன. இதனிடையே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அத்துடன் பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் சுகாதார கேடு நிலவியது. இதனிடையே ஆவுடையார்குளமும் உடையும் அபாயம் நிலவியது. இதையடுத்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பரமன்குறிச்சி சாலை, தெப்பக்குளம், மறுகால் வாய்க்கால், தோப்பூர், மார்க்கெட், சுனாமிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு தண்ணீர் வடிய சொந்த செலவில் நடவடிக்கை மேற்கொண்டார்.

அத்துடன் திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள சாலைகள் அனைத்தும் உருக்குலைந்தன. இதையடுத்து இவற்றை தனது சொந்த செலவில் சீரமைக்க அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பேரில், சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணிகளை திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில்  நகர பொறுப்பாளர் வாள் சுடலை, கலைச்செல்வன், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பார்வையிட்டனர்.மேலும் காமராஜர் சாலை பகுதியை ஜேசிபி துணையுடன் சரள் மணலால் சீரமைத்தனர்.

Related Stories: