தொடர் மழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேக்கம் குளத்தூரில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அவலம்

குளத்தூர், டிச. 4:   தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள வேடநத்தம், வெங்கடாசலபுரம், வள்ளிநாயகிபுரம், கொல்லம்பரம்பு, முள்ளூர், த.சுப்பையாபுரம், முத்துக்குமாரபுரம், வீரபாண்டியாபுரம், பனையூர், வேப்பலோடை, தருவைகுளம், வைப்பார், சூரங்குடி, வேம்பார், பூசனூர், புளியங்குளம், கெச்சிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழைக்கு முன்பாக அப்பகுதி விவசாயிகள் தங்களது மானாவரி விவசாய நிலங்களை உழுது கம்பு, சோளம், மிளகாய், உளுந்து சாகுபடி செய்திருந்தனர். இதனுடன் ஊடு பயிர்களாக வெங்காயம், மல்லி, பாகற்காய், அவரை, சூரியகாந்தி போன்றவைகளை விதைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர். குளத்தூர் வட்டாரத்தில் மொத்தம் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்தனர். இதில் குளத்தூர் வடபாகம், தென்பாகம், கீழ் பாகம் பகுதிகளில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர்.  தொடர்ந்து பருவமழையும் கை கொடுத்ததால்  பயிர்கள் அனைத்தும் ஓரளவு பருவத்திற்கு வளர்ச்சியடைந்து காய்பிடிக்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதி வளர்ச்சியடைந்த பயிர்கள் தொடர்ந்து ஒருவாரமாக தண்ணீரிலே மிதப்பதால் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள்  அழுகும் நிலைக்குள்ளாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertising
Advertising

இதுகுறித்து குளத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி அருஞ்சுனை கனி கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக குளத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதியில் பருவமழை சரிவர பெய்யாமல் கண்ணாமூச்சியாட்டம் காட்டியது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்தையே அடைந்தோம். இந்தாண்டு காலத்திற்கு முன்பே மழை பெய்யத் துவங்கியதால் இந்தாண்டாவது விவசாயம் கரைசேராதா என்ற நம்பிக்கையில் மானாவரி விளைநிலங்களில் விவசாய பணிகளை துவக்கினோம்.

 மக்காச்சோளம், கம்பு, கானம், மிளகாய், மல்லி, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்களை  சாகுபடி செய்ததோடு இவற்றின் இடையே பாகற்காய், அவரைக்காய், சூரியகாந்தி போன்றவற்றை ஊடு பயிர்களாக பயிரிட்டிருந்தோம். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்வதால் பாதி விளைந்த நிலங்களில் மழைநீர் நாள்கணக்கில் தேங்கி நிற்கிறது. மேலும் பாதிபருவத்திற்குமேல் வரக்கூடிய வெங்காய செடிகள் தற்போது தண்ணீரில் மிதப்பதால் அழுகும் நிலையில் உள்ளன. மேலும் உளுந்து செடிகள் நன்றாக வளர்ச்சி கண்டதோடு காய் பிடிக்கும் பருவத்தில் பூக்கள் இருந்தன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பூக்கள் உதிர ஆரம்பித்துள்ளன. அத்துடன் மஞ்சள் நோய் தாக்குதலால் மகசூலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனிவரும் தினங்களில் மழை குறைந்து  வெயில் அடித்தால் மட்டுமே ஓரளவு பயிர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது’’ என வேதனையுடன் கூறினார்.

Related Stories: