மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.33 கோடி ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி

தூத்துக்குடி, ஜூலை 16: மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.33 கோடி, ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு 44 ஆயிரம் எக்ேடர் பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோள பயிர் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை அரசிடம்  அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் 17 மாவட்டங்களில் மக்காச்சோள பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்தம் ரூ.186 கோடி இழப்பீடு தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர்  அறிவித்தார். இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரத்து 373 விவசாயிகளுக்கு ரூ.33 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இந்த பணத்தை ஒரு வாரத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

ஜல்சக்தி அபியான் திட்டத்தில் 4 பிர்க்கா தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரூ.634 கோடி செலவில், 60 எம்எல்டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் அனைத்தும் இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும். பெரியதாழை பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்கப்படும். தூத்துக்குடியில் எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவை, பாதிப்புகள், வியாபாரிகளுக்கான பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு இந்த மைதானத்துக்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories: