உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் செயல்படாத உடன்குடி யூனியன் நிர்வாகம்

உடன்குடி, மே 21:  உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உடன்குடி யூனியன் செயல்படாமல் பணிகள் முடங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை என குமுறுகின்றனர். உடன்குடி யூனியன் 17கிராம உள்ளாட்சிகளை உள்ளடக்கியதாகும். வறட்சிப்பகுதியான இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சிப்பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் பெரும்பாலான கிராமங்களில் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும் குடிநீர் விநியோகத்திற்கென பயன்படுத்தப்படும் மின்மோட்டார்கள் பழுது ஏற்படாலும், மின் விளக்கு பழுதடைந்தாலும் அந்தப்பணிகள் விரைந்து நிறைவேற்றுவது கிடையாது. காரணம் தனி அலுவலரே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முறையாக பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஆய்வுக்கென செல்வது கிடையாது. இதனால் ஏராளமான பணிகள் தேக்கமடைந்துள்ளன.

Advertising
Advertising

 மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் உள்ள காலக்கட்டங்களில் அவர்களே மின்மோட்டர் பழுது, குடிநீர் குழாய் உடைப்பு, மின்விளக்கு பழுது என்றால் உடனே அதற்கென பணியாளர்களை பணியமர்த்தி அதனை சீரமைத்து அதற்குரிய பில்லை உடனே வழங்கிவிடுவர். ஆனால் தற்போது இதேபோன்று மின்மோட்டார், மின்விளக்கு பழுது என்றால் சம்பந்தப்பட்ட மண்டலவட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் பார்வையிடுகிறார் தொடர்ந்து பணிகள் நடைபெறும் போது, நடந்து முடிந்த பின்னர் என ஒவ்வொரு கட்ட பணிகளின் போதும் மேலதிகாரிகள், சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுக்கு வாட்ஸ்அப்மூலம் தகவல் பரிமாறி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து வேலை செய்து வந்தாலும் அந்தப்பணியாளர்களுக்கான கூலிகளை உடனே வழங்குவது கிடையாது.

அவர்களிடம் ஏதாவது எதிர்பார்த்து பில்களுக்கு உரிய தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் ஏராளமான பில்கள் தேக்கமடைந்து காணப்படுகிறது. தற்போது உடன்குடி யூனியனில் ஒருசில பஞ்சாயத்துகளில் ஏதாவது மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றால் உடனே கூலி கிடைக்காது என்ற காரணத்தினால் வேலைக்குச் செல்லவே பணியாளர்கள் யோசிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தக்க நடவடிக்கை எடுத்து செயல்படாமல் முடங்கி கிடக்கும் உடன்குடி யூனியன் உள்ளாட்சித்துறை நிர்வாகத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதில் கூற மறுப்பு

இதுகுறித்து உடன்குடி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘எங்கள் அலுவலக ரகசியங்களை உங்களிடம்

கூற வேண்டிய அவசியமில்லை’ எனக்கூறி இணைப்பைத் துண்டித்தார்.

Related Stories: