நெஞ்சுவலியால் டிரைவர் மரணம் பள்ளி வாகனம் சுவரில் மோதி 6 குழந்தைகள் காயம்

ஆறுமுகநேரி, ஏப்.25: ஆறுமுகநேரி அருகே பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி வந்த டிரைவர் திடீரென நெஞ்சுவலியால் துடித்து இறந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சுவரில் மோதியது. குழந்தைகள் 6 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இருந்து அடைக்கலாபுரம் செல்லும் சாலையில் முத்துகார்டன் உள்ளது.  இங்கு பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது.  சுற்றுவட்டாரத்தில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் இப்பள்ளியில் படிக்கின்றனர். மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு பள்ளி நிர்வாகத்தினரால் பேருந்து வசதி உள்ளது. நேற்று காலை 10 மணிக்கு ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள குழந்தைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு டிரைவர் மோகன்ராஜ் (45) என்பவர் வந்துக்கொண்டிருந்தார். 21 குழந்தைகளும், 3 ஆசிரியர்களும் இருந்தனர். ஆறுமுகநேரி அடுத்த காமராஜர்புரத்தில் இரண்டு பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சுமார் 100 மீட்டர் தூரம் செல்லும் போது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியாமல் டிரைவர் சீட்டில் சாய்ந்து விழுந்தார். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து செல்வராஜ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி மரத்தில் மோதி நின்றது.

வாகனத்தில் இருந்த பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கூக்குரலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள இளைஞர்கள் ஓடிவந்து குழந்தைகளை பள்ளி வாகனத்தில் இருந்து இறக்கி அவர்களுக்கு உதவி செய்தனர். மயங்கிய நிலையில் இருந்த டிரைவர் மோகன்ராஜை உடனடியாக ஆட்டோவில் ஏற்றி திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மோகன்ராஜை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்தில் 6 குழந்தைகளுக்கு நெற்றி, தலை, உதட்டில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த பள்ளி குழந்தைகளை மற்றொரு பள்ளி வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சத்தியவாணிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பள்ளி வாகன டிரைவர் மோகன்ராஜ் ஆத்தூர் அருகே உள்ள செல்வன்புதியனுரை சேர்ந்தவர். இவர் தற்போது ஆத்தூர் புன்னைக்காயல் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார். இவருக்கு சுப்புலெட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர் இப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

Related Stories: