ஆறுமுகநேரியில் மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியது மின்தடையால் கிராம மக்கள் அவதி

ஆறுமுகநேரி, ஏப்.22: ஆறுமுகநேரியை அடுத்த சாகுபுரத்தில் உப மின்நிலையம் உள்ளது.  இங்கிருந்து ஆறுமுகநேரி, ஆத்தூர், புன்னைக்காயல், குரும்பூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும்  சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் சப்ளை வழங்கப்படுகிறது.     ஆறுமுகநேரிக்கும் தெற்கு ஆத்தூர் இடையே தண்ணீர்பந்தல் கிராமம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணிக்கு இடி, மின்னல் தாக்கியது.  இதில் அங்கிருந்த டிரான்ஸ்பார்ம் உள்ள கோப்பைகள் வெடித்து சிதறியது. மேலும் அதில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் உயர்மின் அழுத்த கம்பிகளும் துண்டு துண்டாக அறுந்து தீப்பொறியுடன் விழுந்தது.   மேலும் மின்னல் தாக்குதலால் சாகுபுரம் உபமின் நிலையத்தில் உள்ள 16எம்.எம். திறன் கொண்ட பவர் டிரான்ஸ்பார்மர் பயங்கர வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறியது.  இதில் இருந்து கிளம்பி தீப்பிழம்புடன் கூடிய வெளிச்சம் மற்றும் புகை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புன்னைக்காயல், குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தெரிந்தது.   தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் தண்ணீர் பந்தல் கிராமத்தில் உயர்மின் அழுத்த கம்பிகள் சாலையில் அறுந்து கிடந்தது. உடனடியாக அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மரக்கட்டையை கொண்டு அறுந்து கிடந்த கம்பிகளை சாலையின் ஓரமாக அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மின்வாரியத்திற்கும், காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் டிஎஸ்பி பாரத், ஆறுமுகநேரி சப்இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் மின் அதிகாரிகள், நெல்லை மண்டல முதன்மை பொறியாளர் செல்வகுமார், தூத்துக்குடி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் டக்கன், கோட்ட பொறியாளர் பிரபாகரன், உப மின்நிலைய பொறியாளர் ஜெயராமன்,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனால் ஒரு மணிநேரம் திருச்செந்தூர்- தூத்துக்குடி இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மின்னல் தாக்குதலினால் ஆறுமுகநேரி உள்ள டிரான்ஸ்பார்மர்களில் பயங்கர சத்தத்துடன் தீப்பிழம்புகள் ஏற்பட்டது.  பல்வேறு இடங்களில் நள்ளிரவு 11.45மணி முதல் மின்தடை ஏற்பட்டது.  நேற்று காலை 8.30 மணிக்கு பழுது சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது. ன்னல் தாக்குதல், டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்தது போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Related Stories: