இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

தூத்துக்குடி, அக்.30: மாப்பிள்ளையூரணி, ஆழ்வார்திருநகரி பகுதி மக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட கேவிகே.சாமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பார்வதி தலைமையில் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள மனு: நாங்கள் மாப்பிள்ளையூரணி கேவிகே சாமிநகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் முகவரியில் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்றுள்ளோம். குடியிருக்கும் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு, மின்சார வசதிகளையும் பெற்று இருக்கிறோம்.எனவே நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு இலவசவீட்டுமனைப் பட்டாவை வழங்கிடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.இதுபோன்று, ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு: ‘நாங்கள் பலவருட காலமாக வாடகை வீடுகளில் குடியிருந்து வருகிறோம்.

மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ள எங்களுக்கு அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவசமாக வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திடவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Related Stories: