தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி

தூத்துக்குடி, செப். 26: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்க சிலர் சதி செய்து வருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களை படுகொலை செய்யும் நோக்கத்தோடு ஊடுருவியவர்களில் 6 பேரை, தமிழக போலீசார் கைது செய்து உள்ளனர்.  தமிழகத்தில் அர்பன் நக்சலைட்களின் செயல்பாடு தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்தியது. தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஊடுருவி தமிழகத்தை காஷ்மீராக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.  

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்க சிலர் சதி செய்து வருகின்றனர். மக்கள் அதிகாரம், புரட்சிகர ஜனநாயக முன்னணி, மே 17 போன்ற இயக்கங்களை தடை செய்திருக்க வேண்டும்.  பாயில் வேதாந்தா என்ற அமைப்பு லண்டனில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அமைப்பிடம் இருந்து  பணத்தை பெற்று கொண்டு தான் இங்கு பல்வேறு இயக்கங்கள் சேர்ந்து ஸ்டெர்லைட் போராட்டத்தை நடத்தி உள்ளன.  144 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவில் சுமார் 50 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

எனவே, முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அரசே செய்து கொடுக்க வேண்டும். இந்து ஒற்றுமையில் மேலும் எழுச்சி ஏற்படும் என்பதால் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் தூண்டுதலின் பேரில் இவ்விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்’’ என்றார்.  கட்சி நிர்வாகி செல்வசுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: