3 மாதங்களாக அவலம் விஜயராமபுரம் வழியாக பஸ்கள் நிறுத்தம்

சாத்தான்குளம், செப். 19: சாத்தான்குளம்  அருகே விஜயராமபுரம் வழியாக சென்று வந்த அரசு பஸ்கள் 3 மாதங்களாக  நிறுத்தப்பட்டுள்ளதால்  கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சாத்தான்குளத்தில்  இருந்து விஜயராமபுரம், சந்திராயர்புரம்விலக்கு, சிறப்பூர் விலக்கு, வழியாக  திசையன்விளை, தட்டார்மடம், பெரியதாழை பகுதிக்கு 6க்கு மேற்பட்ட அரசு  பஸ்கள் இயக்கப்பட்டன. விஜயராமபுரத்தில் இருந்து சிறப்பூர் விலக்கு வரை  சாலை மோசமாக காணப்பட்டதால் கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலை சீரமைத்து  அமைக்கப்பட்டது. சாலை பணி தொடங்கியதும் இந்த ஊர் வழியாக இயக்கப்பட்டு வந்த  பஸ் நிறுத்தம் செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. சாலையானது  சுமார் ஒன்றரை  அடி உயர்த்தப்பட்டது. ஆனால் சாலையோரம் இருபுறமும் முறையாக மணல்  விரித்து சமதளப்படுத்தாததால் மேடு பள்ளமாக காணப்பட்டன. இதனால் விபத்து நிகழ  வாய்ப்புள்ளவென பஸ்கள் இந்த வழியாக இயக்கிட மறுத்து தொடர்ந்து  மாற்றுப்பாதையிலே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் விஜயராமபுரம், சிறப்பூர்,  சந்திராயர்புரம், சாமிதோப்பு, அடப்புவிளை, உள்ளிட்ட கிராம மக்கள்  வெளியூர்களுக்கு செல்ல மிகுந்த சிரமம் அடைந்து  வருகின்றனர்.

இதுகுறித்து   கிராமமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்  200க்கு மேற்பட்ட கிராம மக்கள் சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனடியாக சாலைப்பணிகள்  நிறைவடைந்து  பஸ் வசதி செய்யப்படும் என சாத்தான்குளம் தாசில்தார்  ஞானராஜ் உறுதி அளித்தார். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால்  இன்னும் சாலையோரம் இருபுறமும் மணல் விரித்து சமதளப்படுத்ததால் பஸ்கள்  இன்னும் இயக்கப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,‘‘ இந்த  சாலை சீரமைக்கப்படாமல் இருந்திருந்தால்  பஸ் வசதி நிறுத்தப்படாமல்  இருந்திருக்கும். சாலை அமைக்கப்பட்டது என அதிகாரிகள் எங்களை சிரமம் அடையும்  நோக்கில் செயல்படுவதாக தெரிகிறது. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு  விஜயராமபுரம் வழியாக நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்றனர்.

Related Stories: