பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயற்சி: தாய் உள்பட 4 பெண்கள் கைது: நர்சுக்கு வலை

மதுரை: மதுரையில் பிறந்து மூன்றே நாளான பெண் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து பெண் குழந்தை கடத்தப்பட்டு, அண்ணா பஸ் நிலையம் அருகே கரும்பாலை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக, மாநகர போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார், அண்ணா பஸ் நிலையம் மற்றும் கரும்பாலை பகுதிகளை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், அண்ணா பஸ் நிலையம் அருகே ஆட்டோவில், சந்தேகப்படும்படியாக பெண் குழந்தையுடன் வந்த உசிலம்பட்டி அருகே நாட்டார்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (60) என்பவரை  பிடித்தனர். கிடுக்கிப்பிடி விசாரணையில், பாண்டியம்மாள் பெண் குழந்தையை விலைக்கு வாங்கி, விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பிறந்து மூன்று நாளேயான பெண் குழந்தையை கைப்பற்றிய போலீசார், நாட்டார்பட்டி பாண்டியம்மாள், நர்ஸ் மாலதி, கரும்பாலை பாண்டியம்மாள், உடந்தையாக இருந்த அழகு பாண்டியம்மாள் (45), குழந்தையை விற்ற தாய் ஆகிய 5 பேர் மீது நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை நாட்டார்பட்டி பாண்டியம்மாள், கரும்பாலை பாண்டியம்மாள், அழகுபாண்டியம்மாள், குழந்தையின் தாய் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான நர்ஸ் மாலதியை தேடி வருகின்றனர்.

Related Stories: