2 பைபர் படகுகளுடன் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள்பேட்டையை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது கணவர் பொன்னுக்குட்டி, மகன் ரீகன், அதே ஊரை சேர்ந்த குமார், அன்புராஜ் மற்றும் கவுசிக் ஆகிய 5 பேரும் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களையும் சிறைபிடித்ததோடு, பைபர் படகை பறிமுதல் செய்தனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று காலை மீன்பிடிக்க சென்ற தங்கராசு, மதன், ராமலிங்கம், செல்வராஜ் ஆகிய 4 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், பைபர் படகை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே காரைக்கால் மீனவர்கள் 11பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: