கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஏ.நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(38). இவர் பர்கூர் அடுத்த ஜெகதேவி அருகே கிரானைட் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி கஜலட்சுமி. கடந்த 31ம் தேதி முதல் சுரேஷ்குமாரை காணவில்லை. அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் கஜலட்சுமியை தொடர்பு கொண்ட சுரேஷ்குமார், தன்னை பண விவகாரத்தில் சிலர் கடத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார். இது குறித்து அவர் உடனடியாக பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கிரானைட் அதிபர் சுரேஷ்குமார், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ரம்யா (26) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் சுரேஷ்குமாரின் செல்போன் டவர் லொகேஷனை பார்த்த போது, பெங்களூரு தனியார் ஓட்டல் பகுதியை காட்டியது.
இதையடுத்து, நேற்று அங்கு விரைந்து சென்ற பர்கூர் போலீசார், சுரேஷ்குமாரை மீட்டனர். அவரை கடத்திய சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ரம்யா(26), மயிலாடுதுறை மாவட்டம், அரசூரைச் சேர்ந்த லெனின்(43), சென்னை ஆவடி பிரபு(37), திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி பாபு(38), சென்னை வில்லிவாக்கம் ராஜேஷ்(42) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கிரானைட் அதிபர் சுரேஷ்குமாருடன், ரம்யா அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். சுரேஷ்குமாரின் வங்கி கணக்குக்கு தொகையை அனுப்பி, அதை எடுத்து கொடுத்தால் அதற்கு கமிஷன் தரப்படும் என பேசப்பட்டுள்ளது. அதன்படி சுரேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு, பலர் தொகையை அனுப்பி, அதை சுரேஷ்குமார் எடுத்து கொடுத்துள்ளார். அதற்காக கமிஷனும் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி பர்கூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள சுரேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு, ரூ.28 லட்சத்து 80 ஆயிரம் வந்துள்ளது. அந்த பணத்தை எடுத்து தருமாறு ரம்யா கூறியுள்ளார். அதற்கு அவரை கிருஷ்ணகிரி வருமாறு சுரேஷ்குமார் கூறியுள்ளார். அங்கு வங்கியில் ரூ.1 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்றும், எந்த வங்கி கணக்கிற்கு வந்ததோ, அங்கு சென்றால் தான் மற்ற தொகை யை எடுக்க முடியும் என கூறியுள்ளனர். இதையடுத்து ரம்யாவை அழைத்துக் கொண்டு, சுரேஷ்குமார் பர்கூர் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஜி.எஸ்.டி. நிலுவை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி சுரேஷ்குமாரின் வங்கி கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் பணத்தை எடுக்க முடியாத ஆத்திரத்தில் ரம்யா மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து, சுரேஷ்குமாரை காரில் பெங்களூருவுக்கு கடத்தி சென்றதும், அவரது மனைவியை மிரட்டி அந்த பணத்தை பறிக்கலாம் என திட்டம் போட்டதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட சுரேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு, குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் ரூ.28.80 லட்சத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் யார்? பணத்தை எடுத்து கொடுக்க கமிஷன் பெறும் இவர்களுக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுரேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு, இதே போல இதற்கு முன்பு பணம் வந்துள்ளதா என்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
