டிரேடிங் செய்வதாக கூறி தமிழகம் முழுவதும் பெண்களிடம் பண மோசடி செய்த தவெக விஜய்யின் குட்டி ரசிகன்: சமூகவலைதளங்களில் பரபரப்பு தகவல்

திருப்பூர்: டிரேடிங் செய்வதாகவும், பணம் கொடுத்தால் இரட்டிப்பாக தருவதாகவும் கூறி தமிழகம் முழுவதும் பெண்கள் உள்பட பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட தவெக விஜய்யின் குட்டி ரசிகன் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருப்பூர் அருகே கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுவன். சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், தனது இன்ஸ்டாகிராமில் ஏராளமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இதனால், இவரை பலர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, இவருக்கு அதிக வருவாயும் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர், தமிழக வெற்றி கழகத்திற்கும், விஜய்க்கும் ஆதரவாக பேசி பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், தவெக கொடி மற்றும் துண்டு உள்ளிட்டவைகளுடன் பல வீடியோக்கள் பதிவு செய்து வருகிறார்.இதற்கிடையே அவர், பலரிடம் டிரேடிங் செய்வதாகவும், இதற்கு பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக வழங்குவதாக கூறியும் பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி பணம் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பலரும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் விஜய்யின் அந்த குட்டி ரசிகர் குறித்து தகவலை தெரிவித்து வருகிறார்கள். பழனி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெண்கள் உள்பட பலரிடம் லட்சக்கணக்கில் சிறுவன் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பல லட்சம் மதிப்பிலான கார் ஒன்றை சிறுவன் வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், தவெக தலைவர் விஜய்யுடன், அவர் செல்போனில் பேசுவது போன்றும் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories: