காதலியை அபகரிக்க முயன்றதால் கல்லூரி மாணவன் படுகொலை: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

வேலூர்: வேலூரில் கல்லூரி மாணவனை கொலை செய்த வழக்கில் அவரது நண்பனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் காதலியை அபகரிக்க முயன்றதால் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் டேனிவளனரசு(19). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் ஆரணியை சேர்ந்த கிஷோர்கண்ணன்(19), புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி(19), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இன்பவர்மா(18). இவர்கள் அனைவரும் வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரியில் செமஸ்டர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் 4 பேரும் சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் டேனிவளனரசு மட்டும் கடந்த 31ம்தேதி இரவு வேலூருக்கு வந்துள்ளார். இந்நிலையில், டேனிவளனரசுவின் செல்போன் சுவிட்ச்ஆப் ஆகியுள்ளது. இதனால் அவரது பெற்றோர், நண்பர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த டேனி வளனரசுவின் பெற்றோர் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கிஷோர்கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ேடனிவளனரசு அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த விசாரணையில் பிடிபட்ட கிஷோர்கண்ணன் போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்து வந்துள்ளார். ஆனாலும் தொடர் விசாரணையில் கிஷோர்கண்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:
புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி, தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவி மீது டேனிவளனரசுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது காதலை வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.

இதையறிந்த பார்த்தசாரதி மற்றும் கிஷோர்கண்ணன் இருவரும், இது தவறானது. ஒருவர் காதலிக்கும் பெண்ணை நண்பனே அபகரிக்க பார்ப்பது சரியல்ல என்று கண்டித்துள்ளனர். ஆனாலும் டேனிவளனரசு தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாததால், அவரை தீர்த்துக்கட்ட நண்பர்கள் 2 பேரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று இரவு டேனிவளனரசுவை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை ஆந்திர எல்லைக்கு எடுத்துச் சென்று வீசியதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் முக்கிய குற்றவாளியான பார்த்தசாரதியை தேடி தனிப்படை போலீசார் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கிஷோர்கண்ணனை போலீசார் நேற்று இரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: