சங்கராபுரம்: மருமகளின் கழுத்தை மாமியார் அறுத்து, தலையை துண்டித்து ஆற்றின் கரையோரம் சடலத்தை புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சப்பான் மகன் ராஜா. இவர் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த நந்தினி (29) என்பவரை திருமணம் செய்து வளையாம்பட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 5 வருடங்களுக்கு முன்பு ராஜா இறந்து விட்டார். பின்னர் நந்தினிக்கு, விரியூர் கிராமத்தில் பிசியோதெரபிஸ்ட் மையம் நடத்தி வரும் மரிய ரொசாரியோவுடன் (36) பழக்கம் ஏற்பட்டது.
அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு அலெக்சியா கிறிஸ்தோபர் என்ற குழந்தை உள்ளது. 2வது திருமணம் என்பதால் நந்தினிக்கும், அவரது மாமியார் கிறிஸ்தோப் மேரிக்கும் (55) அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சங்கராபுரம் அருகே வடசேமபாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ம்தேதி கிறிஸ்தோப் மேரி, மகனிடம், உனது மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் சடங்கு செய்ய கோயிலுக்கு கூப்பிட்டுச் செல்வதாக கூறி நந்தினியை அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் கிறிஸ்தோப் மேரி மட்டும் தனியாக வீடு திரும்பியுளளார். நந்தினி எங்கே என பலமுறை கேட்டும் பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த மரிய ரொசாரியோ, செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என வந்தது. இதையடுத்து அவர் சங்கராபுரம் போலீசில் மனைவியை காணவில்லை என நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து மாமியார் கிறிஸ்தோப் மேரியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணான தகவல் கூறியதால், கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருமகள் நந்தினியை கழுத்தை அறுத்து கொலை செய்து, சோழம்பட்டு மணிமுத்தாற்று கரையோரம் தலையை தனியாகவும், முண்டத்தை தனியாகவும் புதைத்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு கிறிஸ்தோப் மேரியை அழைத்துச் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து சங்கராபுரம் வட்டாட்சியர் வைரக்கண்ணன் மற்றும் வருவாய்த் துறையினரும் வரவழைக்கப்பட்டு உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யவும், கொலை வழக்கு பதிந்து கிறிஸ்தோப் மேரியை கைது செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது. மருமகளை மாமியாரே தலையை துண்டித்து கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
