வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் கபூராபாத் பகுதியை சேர்ந்தவர் இர்பான்(31), கார் டிரைவர். திருமணமாகி, மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இவர் 8வது வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார். சிறுமியின் தாய் கத்திதாஜெல்(38) கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இர்பான் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி காரில் கடத்தி சென்றுள்ளார். இதற்கு சிறுமியின் தாய் கத்திதாஜெல் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கார் டிரைவரின் செல்போன் சிக்னலையும், ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ததில், சிறுமியை ஏலகிரிமலைக்கு கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இர்பான் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து சிறுமியின் தாய் கத்திதாஜெல் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
