மண் கடத்தல்; தொழிலாளி பலி தவெக நிர்வாகி அதிரடி கைது

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம், கிட்டபையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(38). கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(58). இருவரும் கட்டிடத் தொழிலாளிகள். இவர்கள் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு நாட்றம்பள்ளி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் ஏலகிரிமலை, பாடானூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ரங்கசாமி(26) என்பவர், டிப்பர் லாரியில் மண் கடத்திக் கொண்டு அதிவேகமாக வந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற இவர்களது பைக் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சட்ட விரோத மண் கடத்தல், அதிவேகமாக சென்று விபத்தை நிகழ்த்தி உயிர் சேதம் ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த டிப்பர் லாரி டிரைவர் ரங்கசாமி, மண் கடத்தலுக்கு துணை போன லாரி உரிமையாளர் நவமணி(48) ஆகிய இருவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட லாரி உரிமையாளர் நவமணி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.

Related Stories: