2வது சுற்றில் பியான்கா

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்கு தகுதி பெற்றார். முதல் சுற்றில் கிரேட் பிரிட்டனின் எம்மா ரடுகானுவுடன் (20 வயது, 72வது ரேங்க்) மோதிய பியான்கா (22 வயது, 31வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ரடுகானு 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி ரடுகானுவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த பியான்கா 6-3, 3-6, 6-2 என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 33 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தனது முதல் சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் லெசியா சுரென்கோவை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் ஷெல்பி ரோஜர்ஸ், சோபியா கெனின், டெய்லர் டவுன்செண்ட், ராபின் மான்ட்கோமரி, மேடிசன் பிரெங்கிள் (அமெரிக்கா), கரோலினா முச்சோவா (செக்.), அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச் (பெலாரஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: