பாக்.-ஆப்கான் இடையே போர் பதற்றம்; பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகும் ஆஸ்திரேலியா வீரர்கள்: கெஞ்சும் பிசிபி தலைவர்

 

லாகூர்: இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி ) பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்)தொடரை நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஆனால் பிஎஸ்எல்லின் மதிப்பை விட ஐபிஎல் மதிப்பு எட்டக்கூட முடியாத தூரத்தில் உள்ளது. இந்த ஆண்டு பிஎஸ்எல் லீக் வரும் 26ம் தேதி முதல் மே 3ம்தேதி வரை நடைபெற உள்ளது. ஐபிஎல்லில் ஏலம் போகாத வெளிநாட்டு வீரர்கள் பிஎஸ்எல் லீக்கில் ஆடுகின்றனர். நடப்பு ஆண்டு தொடரில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் உள்பட 15க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியா வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆஸி. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த வார இறுதியில் பிஎஸ்எல் தொடருக்காக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் விமானப்படை , ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் உள்ள மருத்துவமனை மீது குண்டு வீசியதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கு ஆப்கானிஸ்தான், இந்தியா உள்பட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் உள்கட்டமைப்பு மற்றும்ராணுவ தளங்களை குறிவைத்து தான் தாக்கியதாக பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மிரட்டி உள்ளது. மேலும் இதற்கு பழிவாங்கும் விதமாக, இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் போன்ற முக்கிய நகரங்களில் ஆப்கன் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற பீதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா வீரர்கள் பிஎஸ்எல் தொடரை புறக்கணிக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில், ஆஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ பயண ஆலோசனைச் சேவையான ஸ்மார்ட் டிராவலர், தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என ஆஸ்திரேலியக் குடிமக்களை எச்சரித்தது. இந்த ஆலோசனை மார்ச் 3 அன்று வெளியிடப்பட்டது; தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் ஆஸி. வீரர்கள் கண்டிப்பாக வரமாட்டார்கள் என தெரிகிறது. இதனால் பிஎஸ்எல் தொடருக்கு சிக்கல் உருவாகி இருப்பதால் பிசிபி கலக்கத்தில் உள்ளது. இதனிடையே பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்து அவர்களை வரவழைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதனையும் மீறி நிலைமை மோசமடைந்தால் அவசரகால வெளியேற்றத்திற்காக ஒரு தனியார் ஜெட் விமானம் வழங்கப்படும் என்று நக்வி , கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு உறுதியளித்துள்ளார். இருப்பினும், வான்வெளி மூடப்பட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூண்ட பிறகு மேற்கு ஆசியாவில் விமான சேவை முடங்கியது. டேனியல் மெட்வெடேவ் போன்ற டென்னிஸ் வீரர்கள் துபாயிலிருந்து ஓமனுக்கு, அதுவும் காரில் பயணிக்க வேண்டியிருந்தது. டி.20உலக கோப்பையில் ஆடிய தெ.ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கூட இந்தியாவில் இருந்து நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் ஆஸி. வீரர்கள் தொடரை புறக்கணிப்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஷித்கான் ஆவேசம்
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ஆப்கன் டி.20 அணி கேப்டன் ரஷித்கான் எக்ஸ் தள பதிவில், ”காபூலில் நடந்த பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழந்த செய்தி வருத்தத்தை அளிக்கிறது. மக்கள் வசிக்கும் வீடுகள், கல்வி வசதிகள் அல்லது மருத்துவக் கட்டமைப்புகளை, வேண்டுமென்றே அல்லது தற்செயலாகத் தாக்குவது ஒரு போர்க்குற்றம். குறிப்பாக ரமலான் புனித மாதத்தில் மனித உயிர்கள் மீது காட்டப்படும் அலட்சியம் மிகவும் அருவருப்பானது மற்றும் ஆழ்ந்த கவலையளிக்கிறது.

இது பிரிவினையையும் வெறுப்பையும் மட்டுமே தூண்டும். ஐ.நா மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் இந்தச் சமீபத்திய அட்டூழியத்தை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கான் மக்களுடன் நான் நிற்கிறேன். நாம் குணமாகி, ஒரு தேசமாக எழும்புவோம். இன்ஷா அல்லாஹ்!” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: