இண்டியன்வெல்ஸ்: இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ரஷ்ய வீரர் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன.
நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர் (24), ரஷ்யா வீரர் டேனியில் மெத்வதேவ் (30) உடன் மோதினார். அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரசுக்கு அதிர்ச்சித் தோல்வியை பரிசாக தந்த மெத்வதேவ், நேற்றைய போட்டியிலும் அட்டகாச ஆட்டத்தை அரங்கேற்றி ஜானிக் சின்னரை திணறடித்தார். இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் முதல் செட் டைபிரேக்கர் வரை நீண்டது. அந்த செட்டை 7-6 (8-6) என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் போராடி வசப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் மெத்வதேவின் ஆட்டம் ஆக்ரோஷமாக காணப்பட்டது. தனது அனுபவ ஆட்டத்தால் அவரை சாமர்த்தியமாக சின்னர் எதிர்கொண்டபோதும் அந்த செட்டும் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டையும் 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய சின்னர், இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார்.
