ஐபிஎல் டி20 கிரிக்கெட்; சிஎஸ்கே பீல்டிங் கோச் ஜேம்ஸ் போஸ்டர்

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் போஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், அணிகளை கட்டமைக்கும் பணியில் ஒவ்வொரு அணிகளும் ஈடுபட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் போஸ்டரை சிஎஸ்கே நிர்வாகம் நியமித்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 12 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஜேம்ஸ் போஸ்டர் விளையாடியுள்ளார். சர்வதேச அளவிலும், ப்ரான்சைஸ் கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐஎல் டி20 லீக் தொடரில் அவரது பயிற்சியின் கீழ் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட்டில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக ஜேம்ஸ் போஸ்டர் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார். இவர், முன்னதாக கடந்த 2020 முதல் 2023 வரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கேகேஆர் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

ஜேம்ஸ் போஸ்டர், சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி, பந்துவீச்சு ஆலோசகராக உள்ள எரிக் சிம்மன்ஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற உள்ளார். நடப்பு சீசனில் வரும் 30ம் தேதி நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தன் முதல் போட்டியில் விளையாடுகிறது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே, இந்த சீசனில் முற்றிலும் புதுபாய்ச்சலுடன் களம் காணவுள்ளது. உள்ளூர் அளவில் அசத்தும் இளம் வீரர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கொண்ட வீரர்கள் கொண்ட கலவையாக உள்ள சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் வாகை சூட காத்திருக்கிறது.

Related Stories: