உலகக்கோப்பை கால்பந்து தொடர்: ஈரான் போட்டிகள் மெக்சிகோவிற்கு மாற்றம்? பிபாவிடம் பேச்சுவார்த்தை

அமெரிக்கா: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் பங்கேற்கும் லீக் சுற்று போட்டிகளை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு மாற்ற பிபா கூட்டமைப்புடன் ஈரான் கால்பந்து சம்மேளனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் வரும் ஜூன் 11ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஈரான் அணி தொடர்ந்து 4வது முறை தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஆசிய தகுதிச்சுற்று போட்டியின் 3ம் கட்டத்தில் தனது குழுவில் முதலிடம் பிடித்ததன் மூலம் ஈரான் உலகக்கோப்பையில் ஆட தகுதியடைந்தது.

இச்சூழலில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், ஈரான் கால்பந்து அணி அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலும், “அமெரிக்காவில் ஈரான் வீரர்களின் பாதுகாப்பிற்கு தன்னால் உத்தரவாதம் அளிக்க இயலாது’’ என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவிட்டார். இதனால், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ், சியாட்டின் நகரில் ஈரான் அணி பங்கேற்க இருக்கும் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டும் என பிபா கால்பந்து கூட்டமைப்பிடம் ஈரான் கால்பந்து சம்மேளனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஈரானிய கால்பந்து தலைவர் மெஹ்தி தாஜ் தனது எக்ஸ் தளத்தில், “ஈரான் தேசிய அணியின் பாதுகாப்பை தன்னால் உறுதி செய்ய முடியாது என டிரம்ப் வெளிப்படையாக கூறியுள்ளதால், நாங்கள் நிச்சயமாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள மாட்டோம். ஈரான் பங்கேற்கும் போட்டிகளை மெக்சிகோவில் நடத்துவது குறித்து பிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’’ எனக்கூறியுள்ளார். ஈரான் அணி ஜி பிரிவில், பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உக்ரைன் போர் காரணமாக பிபா உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இடமாற்றப்பட்டது. அதனால், ஈரான் கோரிக்கையை பிபா ஏற்று, அந்த அணி பங்கேற்கும் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்றும் வாய்ப்பு அதிகமுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: