திருவனந்தபுரம்: டி 20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சனை பாராட்டி தங்க பேட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் பரிசாக அளித்தார். இந்தியா மற்றும் இலங்கையில் நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கி, தொடர் நாயகன் விருதையும் பெற்றார். தொடர்ந்து கேரளா திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அரசு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிலையில் கேரள மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் சஞ்சு சாம்சனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், சஞ்சுவுக்கு தங்க பேட் பரிசளித்து வாழ்த்தினார்.
* திலக்கை பாராட்டிய ரேவந்த்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் திலக் வர்மா ஹைரதாபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அம்மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான முகமது அசாருதீனும் திலக்வர்மாவின் சாதனைகள் தெலங்கானா முழுவதும் இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் எனக்கூறி வாழ்த்து தெரிவித்தார்.
