கேகேஆர் அணியில் காயமடைந்த ஹர்ஷித் ராணாவுக்கு பதில் இவரா!

கொல்கத்தா: ஹர்ஷித் ராணாவுக்குப் பதில் கொல்கத்தா அணியில் சிமர்ஜீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, சமீபத்தில் முடிந்த ‘டி-20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பந்துவீசினார். அப்போது வலது முழங்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அதன்பின் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள ஹர்ஷித் ரானா, இந்திய கிரிக்கெட் போர்டு நடத்திய விழாவில் பங்கேற்க, ‘வாக்கிங் ஸ்டிக்’ உதவியுடன் நடந்து வந்தார். இதனால், ஹர்ஷித் ராணா முழுமையாக மீண்டு வர, கூடுதல் நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், கொல்கத்தா அணி நிர்வாகம் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக 6 வேகப்பந்து வீச்சாளர்கள் பங்கேற்ற தேர்வு முகாம் நடத்தியது. இதில் டில்லியை சேர்ந்த சிமர்ஜீத் சிங் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவர் 2022-24ம் ஆண்டுகளில் சென்னை அணிக்காக 3 சீசனில் 10 போட்டியிலும், 2024ல் ஐதராபாத் அணிக்காக 1 சீசனில் 4 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட் எடுத்துள்ளார். எனினும் தொடர்ந்து 140 கி.மீ., வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட சிம்ரஜீத் சிங், யார்க்கர் வீசுவதில் வல்லவர். இவர், டில்லி பிரிமியர் தொடரின் சிறந்த பவுலராக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: