லண்டன் நிறுவனம் விலகியது; ஆர்சிபி அணியை வாங்க 2 நிறுவனம் இடையே போட்டி: ரூ. 19,386 கோடிக்கு விலை போக வாய்ப்பு

 

மும்பை: ஐபிஎல் அணிகளிலேயே ஆர்சிபி தான் அதிக பிராண்ட் மதிப்பைக் கொண்டுள்ளது. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் வென்றிருந்தாலும் கூட ஆர்சிபியின் மதிப்பு அவர்களைவிட அதிகமாக உள்ளது. ரசிகர்களும் ஆர்சிபிக்கு தான் அதிகம். ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3 நிறுவனங்கள் இடையே அணியை வாங்க போட்டி இருந்தது. இதில் லண்டனைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட்டின் இணை உரிமையாளரும் இணைத் தலைவருமான அவ்ராம் கிளேசரின் லான்சர் கேப்பிட்டல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கும் முடிவில் இருந்து விலகி இருக்கிறது. இதனால் ஸ்வீடன் உலகளாவிய முதலீட்டு நிறுவனமான ஈக்யூடிக்கும், கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ் & கோ மற்றும் டெமாசெக் உடனான ரஞ்சன் பாயின் கூட்டமைப்புக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

ஒரு நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளில் உரிமையாளராக இருப்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தடை செய்வதால், லான்சர் கேப்பிட்டல் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கும் தனது ஆர்வத்தை விலக்கிக் கொண்டிருந்தது. முந்தைய அறிக்கைகளின்படி, லான்சர் கேப்பிட்டல் நிறுவனம் 1 முதல் 1.8 பில்லியன் (சுமார் ரூ. 9,236 முதல் ரூ. 16,616 கோடி) வரை ஏலம் கேட்கத் தயாராக இருந்தது. இருப்பினும், இறுதி ஏலத்திற்கான நேரம் நெருங்கிய நிலையில் அவர்கள் பின்வாங்கினர். இப்போது, ​​இது இருமுனைப் போட்டியாக உள்ளது. தற்போதைக்கு, ஈக்யூடி என்ற பங்கு நிறுவனம் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் 2 முதல் 2.1 பில்லியன் (சுமார் ரூ. 18,463 முதல் ரூ. 19,386 கோடி) வரையிலான வரம்பில் ஒரு உறுதியான ஏலத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

விற்பனைக்கான காலக்கெடு மார்ச் 31ம்தேதி வரை மட்டுமே உள்ளது. இதனால் ஆர்சிபி-யின் தற்போதைய உரிமையாளர்களான டயாஜியோ, அவசரத்தில் உள்ளது. இருப்பினும், பிசிசிஐ இந்த விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கும் வரை உரிமை மாற்றம் நிறைவடையாது. பிசிசிஐ ஆண்டுப் பொதுக் கூட்டத்தை அக்டோபர் மாதத்தில் தான் நடத்த வாய்ப்பு உள்ளது. அந்த கூட்டத்தில் தான் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கும் முடியும் என்பதால் முறைப்படி ஆர்சிபிவிற்பனை தாமதமாகும் என தெரிகிறது.

Related Stories: