லா லிகா கால்பந்து சொல்லி அடித்த சொஸைடாட்

 

சான் செபாஸ்டியன்: லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று, ரியல் சொஸைடாட் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் ஒஸாஸுனா அணியை வீழ்த்தியது. உலகின் முக்கியத்துவம் வாய்ந்த கால்பந்து போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வருகின்றன. சான் செபாஸ்டியன் நகரில் நேற்று நடந்த போட்டியில் ரியல் சொஸைடாட் அணியும், ஒஸாஸுனா அணியும் மோதின.

போட்டியின் துவக்கத்தில் ரியல் சொஸைடாட் அணி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டினர். அதற்கு பயனளிக்கும் வகையில் போட்டியின் 24வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அந்த அணியின் மிகெல் ஒயாஸ்ஸபால் சிறப்பாக பயன்படுத்தி அணியின் முதல் கோல் போட்டு கரவொலி பெற்றார். அடுத்த 4வது நிமிடத்தில் சொஸைடாட் அணியின் கோன்ஸலோ குய்டெஸ் மேலும் ஒரு கோல் போட்டு அணியை வலுப்படுத்தினார்.

பின்னர், போட்டியின் 2ம் பாதியிலும் சிறப்பாக ஆடிய சொஸைடாட் அணியின் கோன்ஸலோ 52வது நிமிடத்தில் 3வது கோல் போட்டு அணியை அசைக்க முடியாத நிலைக்கு உயர்த்தினார். கடைசி கட்டத்தில் வேகத்தை அதிகப்படுத்திய ஒஸாஸுனா அணி வீரர்கள் கோல் போடுவதில் ஆர்வம் காட்டினர். போட்டியின் 77வது நிமிடத்தில் அந்த அணியின் விக்டர் முனோஸ் முதல் கோல் போட்டார். அதன் பின் கோல்கள் விழவில்லை. எனவே, 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் சொஸைடாட் அணி அபார வெற்றி பெற்றது.

Related Stories: