குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு பேருதவி: பொதுமக்கள் கருத்து

திருவள்ளூர்: குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 என்பது ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு பேருதவி என்று பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பா. வெயில்முத்து  - குடும்பத் தலைவி, ஜெயின் நகர் திருவள்ளூர்: இன்றைய காலகட்டத்தில் குடும்பம் நடத்தவே பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதிய வருமானமின்மை, கேஸ் விலை உயர்வு போன்ற காரணங்களால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த சூழ்நிலையில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

* ஆர். வத்சலா - குடும்பத் தலைவி, இராஜாபாளையம், பூண்டி ஒன்றியம்:

விவசாயக் கூலித் தொழிலாளியான எங்களைப் போன்ற கோடானு கோடி பெண்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. ரூ.100 சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி சொல்லவே வார்த்தை இல்லை. பெண்களுக்கு திமுக ஆட்சியில் எப்போதும் நல்லதே நடக்கும் என்பதை மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபித்து இருக்கிறார். குடும்ப பெண்களுக்கு மட்டுமல்லாமல் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கும் நிதி உதவி அளித்து பொதுமக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த முதல்வர் தற்போது பெண்களின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

* எஸ்.நீலாவதி - மேட்டுத் தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர்:

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்லாது அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் என்பது பெண்களின் எண்ணமாக உள்ளது. அதேபோல், ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு இலவச பேருந்தில் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு நிதியுதவி என பெண்களுக்கு மட்டுமல்லாது நாட்டு மக்களுக்காக நல்ல பல திட்டங்களை அறிவித்து அதனை திறம்பட செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், தற்போது குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

* கீதா - குடும்பத் தலைவி, பெரியகுப்பம், திருவள்ளூர்:

சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் முதல்வர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்ததற்கு குடும்பத் தலைவி என்ற முறையில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் பெண்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சருக்கு நாங்கள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம். மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் மூலம் பெண்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்த முதல்வர், இனி பெண்களின் மனதில் தங்கியும் விடுவார் என்பதில் ஐயமில்லை.

ஹரிணி - குடும்பத் தலைவி, திருத்தணி: கூறியதாவது திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார் அதன்படி முதல்வராகி குறுகிய காலத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்திருப்பதில் உங்களைப் போன்ற ஏழைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

* எஸ்.பூங்கொடி - மேளப்பூடி காலனி, பள்ளிப்பட்டு ஒன்றியம்

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குடும்பத் தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

* திருமதி க.உஷா - குடும்பத் தலைவி, பெரியகுப்பம், திருவள்ளூர்:

குடும்பத் தலைவிகள் கணவன் சம்பாதித்து தரும் பணத்தில் குடும்பத்தை நடத்த படாதபாடு படுகின்றனர். மாத கடைசியில் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியும் மளிகை கடையில் கடன் வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதால் இனி கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டம் எங்களைப் போன்ற ஏழை எளிய பெண்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல் உள்ளது.

Related Stories: